Thursday, January 29, 2009

வீர வணக்கம்

0 Comments

ஈழப் பிரச்சினையில் இளைஞர் தீக்குளிப்பு எனக் கேள்விப்பட்டவுடன், ஏதோ உணச்சிவேகத்தில் ஒர் இளைஞர் செய்திருப்பார் என நினைத்தேன், ஆனால் முத்து குமார் இறுதி நிமிடங்களில் கொடுத்த துண்டு அறிக்கைகளை படித்த பிறகு, மிக தெளிவாக சிந்திக்கும் ஓர் இளைஞர், கள்ள மொளனம் சாதிக்கும் தமிழக, இந்திய சர்வதேச அரசுகளினால் விளைந்த விரக்தியால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பது தெளிவானது.

இவ்வளவு தெளிவான சிந்தனை கொண்டிருந்த இந்த நண்பர், தமிழனோடு வாழ்ந்து சேர்ந்து போராடியிருக்கலாம்.

போய் வா நண்பா, என்றும் உன் நினைவு எங்கள் நினைவில் நிற்கும். ஈழம் ஒரு நாள் மலரும். உந்தன் உணர்வு வெகு சீக்கிரத்தில் உயிர் பெரும்.

சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே. சே குவேரா.

தமிழர்களே மனதளவிலாவது கோபப்படுங்கள், ஒரு துடிப்பான, தெளிவான சிந்தனை கொண்டிருந்த ஓர் இளைஞன், ஓர் தமிழனின் உயிரை வழக்கம் போல் புறக்கணித்து விடாதிர்கள்.


Monday, January 26, 2009

ஆஸ்திரேலியா வரிப்பந்தாட்டம் 2009 - 2

1 Comments
நான்கவது சுற்று சிறிது ஆச்சரியத்தையும் சிறு அதிர்ச்சியையும் தந்தது. மகளிர் பிரிவில் வெற்றி வாய்ப்புகளுடன் இருந்த அசரீனிகா[பெலாரசு, கிழக்கு ஐரோப்பா, முதல் முறையாக இப்பொதுதான் கேள்விப் படுகிறேன்] உடல் நிலை காரணமாக விலகினார். முதல் கொத்தை[set] சுலபமாக செரினாவிடம் வென்றார். கண்டிப்பாக செரினாவை வென்றுவிடுவார் என நினைத்தேன். நிச்சயமாக ஒரு பதக்கமாவது வெல்வார் என நினைக்கிறேன்.

எதிர் பார்த்த படியே டிமென்டிவா காலிறுதிக்கு தகுதி பெற்று விட்டார். பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளவர்.
Photo Titled Dementieva through to the quarter finals

டாக்கிச் ஆசுத்திரேலியாவிற்கு நம்பிக்கை தரும் விதத்தில் விளையாடி வருகிறார். ஊடகங்கள் இவரைக் கொன்டாடுகின்றன. க்ளேபனோவா எதோ அதிட்டதில்[luck] ஆனா இவானோவிச்சை வென்று விட்டார் என் நினைத்தேன், ஆனால் டாக்கிச்சிற்கு கடுமையான சவாலாக இருந்தார்.

ஆடவர் பிரிவில், சோங்கா இருப்பதை நேற்று வரை அறிந்திருக்கவில்லை. மொத்த கூட்டத்தையும் தனது வசீகரத்தால் கட்டிப்போட்டார். பிளேக் முதலிலுருந்தே சொதப்பி கொண்டிருந்தார். மூன்றாவது கொத்தில் நன்றாக விளையாடினார், சோங்கா இறுதி வரை நிற்ப்பார் என் நினைக்கிறேன். கடந்த முறை டாக்கோவிச்சிடம் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார். இந்த முறை வெல்ல வாழ்த்துகள். ஏதோ நம்மாள் முடிந்தது :)

 Photo Titled Tsonga celebrates beating Ljubicic

எதிர் பாராத விதத்தில் முர்ரே, வெர்டாஸ்காவிடம் தோல்வியுற்றார். முர்ரே காலிறுதியில் விளையாடுவார் என எதிர் பார்த்தேன். நடால் கன்சாலாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிரார். இதுவரை ஒரு கொத்தைக் கூட இழக்காமல் விளையாடி வருகிறார்.


Sunday, January 25, 2009

ஆஸ்திரேலியா வரிப்பந்தாட்டம் 2009

2 Comments
இந்தியாவில் கிரிக்கெட் பைத்தியங்களை கடுப்பேற்றவும், அழகான பெண்களைப் பார்க்கவும்தான் வரிப்பந்தாட்டம் பார்க்க ஆரம்பித்தேன். இப்போது தொடர்ந்து பார்த்து வருகிறேன். தொடர் முடியும் வரை சில பதிவுகள் இடலாம் என்றிருக்கிறேன்.

இந்த தொடர் பதிவில் நான் செய்ய நினைத்திருப்பவை, முடிந்த வரை ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழாக்கம் முயற்சித்தல், வரிப் பந்தாட்டம், நான் ரசிக்கும் சில வீரர்களைப் பற்றி எழுதுதல்.

தமிழ் வளர்வது கடினம், ஆங்கிலத்துடன் போட்டி போட முடியாது என்று தோல்வி பல்லவி பாடுபவர்கள், http://ta.wiktionary.org, விக்சனரி குழு இரண்டையும் பாருங்கள். ஒரு இலட்சம் சொச்சம் வார்த்தைகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. இதில் என்னை மற்றும் எனக்கு தெரிந்த சில நண்பர்களையும் இணைத்துப் பணியாற்றலாம் என்றிருக்கிறேன். அதைப் பற்றி தனிப் பதிவு

-----------------

எனது கனவுக்கன்னிகள் எல்லோரும் காலியாகி விட்டார்கள். மரியா சரப்போவா[உடல் நிலை காரணமாக ஆடவில்லை], ஆனா இவானோவிச், செலினா யான்கோவிச், வில்லியம்சு சகோதரிகள்[செரீனா மட்டும் உள்ளார், ஆனால் நம்பிக்கயளிக்காத ஆட்டம்] எல்லோரும் கால் இறுதிக்கு கூட வரவில்லை. இந்த முறை நம்பிக்கை தரும் விதத்தில் ஆடி வருபவர்கள் சஃபீனா, டாக்கிச், பார்ட்டோலி[இவரைப் பற்றி தனிப் பதிவிடலாம் என்றிருக்கிறேன், சில வருடங்களாக காணாமல் போய் திடீரென திரும்பி வந்திருக்கிறார்].


Photo Titled Jelena Dokic celebrates winning the first set
Bartoli through

---------------------
ஆடவர் ஆட்டத்தில் வழக்கம் போல் நால்வர் குழு நம்பிக்கை அளிக்கிறது. ஃபெடெரெர், நடால், டாக்கோவிச், முர்ரே இவர்களில் ஒருவர் கோப்பைய வெல்வார் என நினைகிறேன். எனது கணிப்பு, நடால், ஃபெடெரெர், டாக்கோவிச், முர்ரே.

நேற்றைய ஆட்டத்தில் சஃபீனா, மற்றும் ஃபெடெரெர் தோற்றுவிடுவார்கள் என நினைத்தேன், முதலில் மோசமாக விளையாடி, பின் சுதாரித்து கொண்டார்கள். வெற்றி நம்முடைய திறமையில் மட்டும் இல்லை நமது திறமையின்மையை எதிரி எந்த அளவிற்க்கு பயன் படுத்தி கொள்கிறார் என்பதிலும் உள்ளது.  சில நேரங்களில் முன்னணி வீரர்கள் இத மறக்கும் போது ஆட்டம் விறுவிறுப்படிந்து விடுகிறது.  வருங்காலத்தில் அலிசி கார்னே, தாமசு போர்ட்ரிச் மின்னுவார்கள் என்று நம்புகிறேன்.

யாருக்காவது கீழே உள்ள வார்த்தைகளுக்கு தமிழாக்கம் தோன்றினால், தெரியப்படுத்துங்கள்
Ace, Dues, voley, Serve, Forehand

Saturday, January 24, 2009

Slumdog Millionaire

3 Comments

ஆகா ஓகோ என்றார்களே என்று பார்க்கப் போனேன், பெங்களூர் PVRல் கூட, முதல் வரிசையில் உட்கார்ந்து பார்த்தது கிடையாது, வெளியிலேயே இருக்கைகள் பற்றிய தகவல் இருக்கும், ஆனால் இங்கே, நோகாமல் $8 வாங்கிக்கொண்டு உள்ளே அனுப்பி, முதல் வரிசையில் உட்கார வைத்து விட்டார்கள்.

வழக்கம் போல் அமெரிக்கர்கள் நொறுக்குத் தீனியை நொறுக்கிக் கொண்டிருந்தார்கள்,  சிலர் சாப்பிடுவதைப் பார்த்தால், எனக்கு பசி அடங்கிவிடுகிறது.

முதல் பாராட்டு, இசைப் புயல் ரகுமான், உறுத்தாத இசை, இந்திய வல்லரசில்(?) சிறுவர்கள் குறிப்பாக, குப்பத்து ஏழை சிறுவர்கள் படும் பாட்டை, இயக்குனர் மசாலா கலப்பிலாமல் எடுத்திருந்தார். இந்திய வல்லரசு என்ற மாய பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்திய ஊடகங்கள், மேல் சாதி/வர்க இந்தியர்கள், இவர்களை அப்படியே பின்பற்றும் நடுத்தட்டு வர்கங்கள் எப்படி இந்தப் படத்தை தூக்கிப் பிடிகிறார்களே என்று புரியவில்லை. இவர்கள் பெருமைப் படக்கூடிய விதத்தில் இந்தியாவைப் பற்றி பெருமையாக எதுவுமே காட்டப்படவில்லை

குப்பத்தை, ஏழை இந்தியாவை இதுவரை திரையில் பார்த்திராத, வளர்ந்து வரும் ஒர் வல்லரசாக மட்டுமே கேள்விப் பட்ட மேலை நாட்டவர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமாகப் படலாம், எனக்கு மற்றோரு இந்தி திரைப் படத்தை ஆங்கிலத்தில் பார்த்த மாதிரி இருந்தது. The Curious Case of Benjamin Button
பார்த்த பிறகு மனதில் நின்ற அளவு இந்தப் படம் நிற்கவில்லை எழுத்தும் வரவில்லை.

Tuesday, January 20, 2009

வெள்ளை மாளிகையில்...

0 Comments
Barack Obama takes the oath of office to become the 44th president ...இன்று அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான் நாள். கருப்பின அடிமைகளை வைத்து கட்டப் பட்ட வெள்ளை மாளிகையில், அடிமைத்தனம் அரசியல் சாசனப்படி சரி என்ற வாதிட்ட அதிபர்கள் வசித்த வெள்ளை மாளிகையில், முதன் முதலாக ஒரு கருப்பின அதிபராக பதவி ஏற்கிறார். 4 மில்லியன் மக்கள் முன்னிலையில் ஒபாமா தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

புஷ் போன்ற[உலகம் முழுதும் நல்ல பெயரை(?) வாங்கிய] அதிபரைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் குடியேரும் ஒபாமாவின் மேல் மிகப் பெரும் எதிர் பார்ப்புகள் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் எழுந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை ஒபாமா ஒரளவிற்கு மேல் பெரும் மாறுதல்களை கொன்டு வர முடியும் என தோன்ற வில்லை. உலகின் அதிகாரம் மிக்க பதவி என்றாலும், அதே அளவு அதிகாரம் படைத்த பழமை வாதிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். ஒபாமாவிற்கு தான் சொன்ன வாக்குறுதிகளை மட்டுமல்லாமல், புஷ் செய்ய மறந்தவகளையும் செய்ய வேண்டியிருக்கும், புஷ் செய்த தவறுகளையும் திருத்த வேண்டியிருக்கும்.

லிங்கன் கண்ட கனவு , மார்டின் லூதர் கிங் கண்ட கனவு இன்று நிறைவேறியிருக்கிறதா என்றால், ஓரளவிற்கே, இன்னும் கருப்பின மக்கள் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம். அவர்கள் தனக்குள்ளாகவும் வெளியும் போரட வேண்டியிருப்பவை அதிகம். ஒபாமா கருப்பின மக்களுக்கு இப்போது அளித்திறுக்கும் உந்துதலை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

புஷ் தனது பதவி முடிவிற்க்கு பிறகு, அதிபர் நூலகம் என்று ஒன்றை அமிக்கப் போகின்றாராம், ஈராக் போருக்கு செலவளித்த தொகையில் உலகம் முழுக்க நூலகங்கள் அமைத்து இருக்கலாம்.ஜிம்மி கார்டர் போன்று தனது பின் அதிபர் வாழ்க்கையை பயனுள்ள வகையில் புஷ் அமைத்துக் கொன்டால், நிறைய பேரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்துவார்.

நான் அமெரிக்க சரித்திரத்தில் ஆவலுடன் எதிர் பார்க்கும் மற்றுமொரு நிகழ்வு, ஒரு செவ்விந்தியர் அமெரிக்க அதிபர் ஆவது. நடக்குமா என்று தெரியவில்லை, நடந்தால் எனக்கும், கடந்த சில நூற்றாண்டுகளாக பெரும் அநீதிக்குள்ளான செவ்விந்தியர்களுக்கும் மகிழ்ச்சி.

நான் ஒபாமாவிடம்/அவர் அரசிடம் வரும் நாட்களில் எதிர் பார்க்கும் மாற்றங்கள்,
  • ஈரக்கில் அமைதியை ஏற்படுத்துவது
  • அமெரிக்கவில் மருத்துவத் துறை சீர்திருத்தம்
  • நொடிந்து வரும் பொருளாதார சரிவிலிருந்து அமெர்க்காவை மீட்டல்
  • ஈரான், பாலஸ்த்தீனம், க்யுபா, போன்ற நாடுகளிடம் நட்புறவை வளர்த்தல்.
  • போராளிகளுக்கும் தீவிர வாதிகளுக்கும் சரியான வரைவைக் கொணர்தல்.
ஒபாமாவின் முழு உரையையும் படிக்கஎன்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் தனது வண்டியில் எழுதியிருக்கும் என்னைக் கவர்ந்த ஒரு வரி, சனவரி 20, 2009, எட்டு வருட பிழைக்கு ஒரு முற்றுப் புள்ளி.  Jan-20-2009, End of an ERROR.

Quote Of the Day

0 Comments
Life is not easy for any of us. But what of that? We must have perseverance and
above all confidence in ourselves. We must believe that we are gifted for
something and that this thing must be attained.
—Marie Curie (1867-1934), chemist, physicist, Nobel Prize winner


Saturday, January 17, 2009

தமிழர்கள், கருணாநிதி, செயலலிதா

3 Comments
திருமாவின் உண்ணாவிரதம் வெறும் நாடகம்: ஜெயலலிதா
தான் ஆடாவிட்டலும் தன் சதை ஆடும் என்பார்கள், இவருக்கு சதை ஆட வில்லை வயிறு எரிகிறது, திருமா இன்னும் செல்வாக்கு அடைந்து விடுவாரோ என்று பயப்படுகிறார். தனக்கு பாதுகாப்பு குறைந்து விட்டது என்பதற்காக தினம் ஒரு அறிக்கை விட்டு, நீதி மன்றத்திடம் முறையிட்ட இவர், தமிழீழ் விடுதலைக்கு இவருடைய பக்தர்களை தமிழகம் முழுக்க போர்ராட்டம் நடத்த சொல்லி இருக்கலாம். தமிழர்களைப் பற்றி கவலைப் படாத, தமிழீழத்தை வெளிப்படையாகவே எதிர்க்கும் செயலலிதா இப்படி எல்லாம் அறிக்கை விடுவதில் பெரிய வித்தியாசமோ, ஆச்சரியமோ இல்லை. அடுத்த செய்தியைப் பாருங்கள்,

இலங்கைப் பிரச்னை: சில நாள்கள் பொறுத்திருப்போம்- முதல்வர்
கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. செயலலிதா எம்ஜிர்- ஆல் திரைப்படத்துறையால் முதலமைச்சர் ஆனாவர், செயலலிதா எப்போதுமே மேல் சாதி பார்ப்பன இந்துவாகத்தான் தன்னை அடையாளப் படுத்திக் கொன்டிருக்கிறார். ஆனால் கருணாநிதி எப்போதுமே தன்னை தமிழனாக தமிழனத்துக்குப் போராடுபவனாக காட்டிக்கொள்பவர். ஆனால் இவருக்கு தமிழர்கள் எல்லாம் ஆட்சிக்கு அப்புறம்தான். தமிழக மக்கள் இவருக்கு கொடுத்த 40 மக்களவை உறுப்பினர்களை வைத்து, இவருக்கு வேண்டிய அமைச்சரவை துறைகளைப் பெற்றுக் கொன்டவர், பிரனாப் முகர்ஜி இலங்கை செல்லவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது என்று அறிக்கை விடுகிறார். ஆனால் கருணாநிதி ஆட்சியில் இதையெல்லாம் ஓரளவுக்காகவது வெளிப்படையாக பேசவவாது முடிகிறது, செயலலிதா ஆட்சியென்றால் மொத்தமாக சிறைதான்.

ஒரு தமிழரை வெளியுறவுத்துறை அமைச்சராக்கிருக்கலாம், தமிழரை வெளியுறவுத் துறை பாதுகாப்புச் செயலராக்கியிருக்கலாம், இலங்கைக்கு ஒரு தமிழரை தூதுவராகியிருக்கலாம், உலகமெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கினைத்து உலகத்தின் கவனத்தை ஈழ்த்துக்கு ஆதரவாக மாற்ற முயற்ச்சி செய்திருக்கலாம். இவர் செய்தது எல்லாம், பணம் கொழிக்கும் துறைகளாகப் பெற்றுக்கொன்டார், தனது பேரன் முதல் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பதவிப் பெற்றுக் கொண்டார். இப்போது தமிழன் செத்துக் கொண்டிருக்கும் போது இன்னும் சில நாள் பொறுத்திறுப்போம் என்கிறார்.

உடனே விஜய காந்த் உங்கள் நினைவுகு வந்தால், அவர் இவர்களையெல்லாம் மிஞ்சும்படி இருக்கிறார்.  அவரை எப்படியாவது முதலமைச்சராக்கி தனது சொல் படி ஆடும் பொம்மை முதல்வராக வைத்துக் கொள்ள ஆசைப்படும் மேல் சாதி தமிழக ஊடகங்களின், கை விரல் அசைவுக்கு கட்டுப் படும் பொம்மையாக இருக்கிறார். தனது 100வது படத்திற்கு பிரபாகரன் என் பெயர் வைத்தவர், இன்று ஒரு அறிக்கை கூட விட மாட்டேன் என்கிறார். ஒருவேளை உண்ணாவிரதம் இருந்தால் எடை குறைந்து விடும் என்று பயப் படுகிறாரோ?

மருத்தவர் அய்யாவைப் பற்றி நீங்களே இங்கே சென்று படித்துக் கொள்ளுங்கள், மருத்துவர் ஐயாவின் கண்துடைப்பு காமடி!

சொல்வதற்கு கடினமாகத்தான் இருக்கிறது, நாம் ஈழத்தமிழர்களுக்காக கவலைப் பட்டால், இவர்கள் வாக்கிற்காக கவலைப் படுபவர்களாக இருக்கிறார்கள்.Thursday, January 15, 2009

தமிழர்களே வாக்களியுங்கள்

0 Comments

எத்தனையோ முறை தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து கையை கறையாக்கிக்கொன்டிருக்கிறோம், ஒரு முறை நம் கையை கறையாக்கமல் ஈழத்து சொந்தங்களுக்காக வாக்களியுங்கள். நம்பிக்கையுடன் வாக்களிப்போம், உதவினால் பெரும் நன்றியுடன் வாழ்த்துவோம், இல்லையென்றால் எப்போதும் போல் தமிழனுக்கு துணை தமிழனே என்று போராட்டத்தை தொடர்வோம். ஒரு நாள் விடிந்தே தீரும்.

நீங்கள் களம் சென்று உயிர் துறக்க வேண்டாம், குண்டு சத்தங்களுக்கிடையே வாடும் சொந்தங்களுக்கு சிறு நம்பிக்கயை கொடுங்கள். தற்போது தேவை நம்பிக்கை மட்டுமே. வாக்களியுங்கள் உங்களால் ஆன சிறு ஆதரவை[வெறும் கருத்து ஆதரவு]உங்களது உறவுகளுக்கு காட்டுங்கள்.

நீங்கள் வாக்களித்தால் சிறைப் பிடிக்கப் படுவீர்கள் என்று பயந்தீர்கள் எனில் எவ்வளவு கருத்து சுதந்திரம்(?) மிக்க நாட்டில் வாழ்கிறோம் என்று வெட்கப் படுங்கள். உண்மையை உரக்கச் சொல்லுங்கள், எட்டு கோடி தமிழர்களை அடைக்க உலகில் எங்குமே சிறை இல்லை[மற்ற இந்தியர்களா(??) அவர்களுக்கு தமிழர்களை, மனிதர்களை விட சாருக் கான்,
சில்பா செட்டி, க்ரிக்கெட் என ஏராளமான முக்கிய விசயங்கள் இருக்கின்றன]. நீங்கள் எந்த விடுதலை இயக்கத்தையும் ஆதரிக்க வேண்டாம், வீடிழந்து, பெற்ற பிள்ளையிழந்து, கட்டிய கணவனை இழந்து கதறி அழும் நம் சகோதரிக்கு,அமைதியாய் வாழ உரிமக்கான சிறு குரலை மட்டும் கொடுங்கள்.

I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it.
Voltaire
 

Tuesday, January 13, 2009

தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்

4 Comments

சிங்கள இராணுவத்தின் அரக்கத்தனம்

0 Comments
இளகிய மனம் உடையவர்கள் இந்த வலைப்பதிவை பார்க்காதிர்கள். மனிதம், பெண்ணியம், போன்ற சொற்களுக்கு பொருள் தெரியாத காட்டுமிராண்டிகள்.

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்

1 Comments
தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
   பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
   புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா.
   சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
  அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
  தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு. -பாவேந்தர்

உலகமெங்கும் தை மகள் அமைதியையும், மகிழ்வையும் பொங்கச் செய்யட்டும். தை மகள் இந்த வருடமாவது ஈழத்தில் அமைதி மலரச் செய்யட்டும்

Monday, January 12, 2009

பண்படாத மண்

0 Comments
Unaccustomed Earth
ஜும்பா லஹரி, மேற்கு வங்காளத்தை சார்ந்த பெற்றோருக்கு பிறந்த அமெரிக்க இந்தியர். Interpreter of Maladies என்ற தன்னுடைய முதல் சிறுகதை தொகுப்பிற்காக புகழ் பெற்ற பூலிட்சர் பரிசைப் பெற்றவர். கட்டுபொட்டியான இந்திய கலாச்சாரதை பின்பற்றும் பெற்றோருக்கும் பிள்ளை, சுதந்திரமான அமெரிக்க காலாச்சாரத்திற்கும், தான் பிள்ளை என்று தன்னை அடையளப்படுத்திக் கொள்கிறார்..

நான் இந்தியாவிலுருந்து அமெரிக்கா கிளம்பிய போது, போய் தொலை சனியனே என்று மகிழ்ச்சியாக என்னுடன் வேலைப் பார்த்த நண்பர்கள், இந்த புத்தகம் மற்றும் சில புத்தகங்களை பரிசளித்தார்கள். அருந்ததி ராய் போல் பெரிய எழுத்தாளர் என்பது படிக்கத் தூண்டியது ஆனால் அட்டைபடம் ஏனோ ஆர்வத்தை மந்தமாக்கியது. கவர்ச்சிக் கன்னி சிம்ரன் படம் போட்டிருந்தால் உடனடியாக படிக்க ஆரம்பித்திருப்பேனோ :)

To Sir With Love[மற்றோரு பரிசுப் புத்தகம், எவ்வளவு நலல்வங்களா இருக்காங்க, என்னோட மேலாலர் வேலைய விட்டு போனா, நான் கூட இப்படித்தான் இருப்பேனோ], படித்துவிட்டு மிகவும் மகிவாய், எழுச்சியாய், இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். முதல் பத்து பக்கங்களுக்குள் மனதில் இனம் புரியாத பாரம் கூடி விட்டது. ஜும்பா, தன் புத்தகம் முழுக்க, உறவுகளுக்கிடையே நிகழும் ஏமாற்றங்களை, நிராகரிப்புகளை பதிவு செய்கிறார். ஒவ்வொரு கதை முடியும் போதும், அடுத்த கதையைத் தொடங்க சில மணி நேரங்களாவது எனக்கு தேவைப் பட்டது.

இந்தப் புத்தகத்தில் உள்ள எட்டு நெடிய சிறுகதைகளும்(!?), அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கிடையே நிகழும் கதை. எப்படி குடியேரிகள் இரண்டு உலகங்களுக்கு இடையில் திரி சங்கப் போல் வாழ்கிறார்கள் என்பதை தன் அனுபத்தை கதையின் ஊடே எந்த ஒரு மிகை உணர்வும் இல்லமல் சொல்லியிருக்கிறார்.

என்னை மிகவும் பாதித்தவை, கடைசி இரு கதைகள், Nobody's Business, ஒரு அமெரிக்க இந்திய பெண்ணிற்கும், அவளுடைய எகிப்திய காதலனுக்கும் மற்றும் அவளுடைய அறை நண்பணுக்கும் இடையே நிகழும் மன்ப் போராட்டத்தை மிக நுணுக்கமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் எழுதியிருப்பார். கதையைப் படித்து முடித்தவுடன், இப்படியெல்லாமா மனிதர்கள் என்று எண்ண வைத்தது.

அடுத்த கதை ஹேமா மற்றும் கௌசிக் என்ற இரண்டு அமெரிக்க இளைஞர்களின், சிறுவயதிலிருந்து தொடங்குகிறது. முதல் பகுதியை ஹேமாவின் சொற்களிலும், இரண்டாம் பகுதியை கௌசிக் பார்வையிலும் சொல்லியிருப்பார். புற்று நோயிற்கு தாயை பறி கொடுப்பதும், தந்தை மறு மணம் செய்து கொள்வதும், கௌசிக்கின் வாழ்வில் எத்தகைய பிடிபின்மையை  ஏற்படுத்துகிறது, அவன் எப்படி தன்னை கடந்த காலங்களில் இருந்து துண்டித்துகொள்ள முயற்சிக்கிறான் என்பதை கனமாக பதிவு செய்திருப்பார்.

இந்தப் புத்தகத்தை முடித்தவுடன், இவருடைய மற்ற புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற தீவிரமான எண்ணத்தை விதைத்து விடுகிறார். புத்தகம் முடிவில் எனக்கு அக்னிச் சிறகுகளில் இருந்து கலாம் சொல்லியிருக்கும் ஒரு வர் நினைவிற்கு வந்த்தது,

அன்பு தரும் அரவணைப்பை விட, அது தரும் வலி அதிகமானது.

[குறிப்பு: Unaccustomed Earth என்ற தலைப்பு Nathaniel Hawthorne-ன் ஒரு வாக்கியத்தில் இருந்து எடுக்கப் பட்டது.
"Human nature will not flourish, any more than a potato, if it be planted and replanted, for too long a series of generations, in the same worn out soil. My children ... shall strike their roots into unaccustomed earth"
]

Sunday, January 11, 2009

வெறுப்பின் விளைவு

0 Comments
தமிழ் நாள்காட்டி ஒன்றிற்காக கூகிளிய போது, இந்த வலைப் பதிவை படிக்க நேர்ந்தது. இந்த மொத்தப் பதிவுமே, தமிழ்ப் புத்தாண்டு தை என்பதை மீண்டும் நடைமுறைப் படுத்தியதை எதிர்ப்பதை விட, கருணாநிதியை அதிகமாக எதிர்க்கிறது[வெறுக்கிறது].

ஒரு விசயத்தை முன் முடிவுடன் அனுகும் போது வரும் குறிகிய பார்வைதான் இவை,

//
The traditional Hindu calendar used till date in Maharashtra, Karnataka and Andhra is among others (and not many remember or know its historical significance) to mark his victory over Vikramaditya. In a way, the current use of this calendar immortalizes Shalivahana.

With this Act, Karunanidhi perhaps aspires to something similar.
//

இந்த புத்தாண்டு மாற்றம் மொத்தமுமே, கருணாநிதியின் விருப்பம், வரலாற்றில் ஒரு இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக், கருணாநிதி செய்த அரசியல் விளையாட்டு.

மக்கள் விரும்பாமல் இருந்திருந்தால், இரண்டாவது நாளே, இந்த சட்டத்தை வாக்குகளுக்கு பயந்து வாழும், கருணாநிதி திரும்பப் பெற்றிருப்பார்.[கட்டாய தலைக் கவச சட்டத்தைத் திரும்பப் பெற்றது போல்]

//
In a sentence: no more Holiday for Vishu/Ugadi because Karunanidhi has
shifted the new year to January 14th by the force of a legislation.
//

//As far as the office-goer is concerned, he has one holiday less.

இவருக்கு, ஒரு இந்து விடுமுறைக் குறைந்து விட்டது என்ற கவலை, கருணாநிதி ”ஒரு சும்மா இந்து விடுமுறை” அறிவித்தால், இவர் அமைதி ஆகிவிடுவார் என்று நினைக்கிறேன்.

//
It is pretty miraculous that not a single debate was held, and no expression except that of consensus!
//
இதிலிருந்தே இவருக்கு, உண்மை புரிந்திருக்க வேண்டும், தமிழ் மக்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை என்று. தமிழ் புத்தாண்டுதான் பிழை திருத்தப் பட்டதே தவிர, இந்து நாட்காட்டி(?) திருத்தப் படவில்லை.

//
//Shouting anti-upper caste slogans is understandable at one level–plus, it is open.
//
//
//In reality, the definition of “Dravidian” is itself a vessel without a bottom.
//

இந்தியாவில் திராவிடர்கள், ஆரியர்கள், என்று இனங்களே கிடையாது, ஒரே இனம் இந்திய தேசிய இனம்(?). யாரும் தென் இந்தியா, வட இந்தியா, கிழக்கிந்தியா என்று பேசிவிடாதிர்கள், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, இருப்பது ஒரே இந்தியாதான். என்ன ஒரு ஒற்றுமை எண்ணம்? இதே ஒற்றுமையை, 2000 வருடங்களாக, ஒடுக்கப் பட்ட மக்களின் பால் காட்டியிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

//
//Another fraud this “Dravidian” zealot has perpetuated is the “Tiruvalluvar year.” According to Vaiyapuri Pillai in History of Tamil Language and Literature, there’s no evidence to peg Tiruvalluvar’s time at 31 BC.
//
சரி, இதை உண்மை என்று கொண்டாளுமே, கீழே அவர் எழுதியிருக்கும் வர்களுக்கு, ஆதாரங்கள் எங்கே?

//
//The traditional Hindu calendar used till date in Maharashtra, Karnataka
and Andhra is among others (and not many remember or know its
historical significance) to mark his victory over Vikramaditya.
//
இதற்கு இவரிடம் ஏதோ கண்ணொளி[video] ஆதாரம் இருப்பதைப் போல பேசுகிறார்.

திருவள்ளுவர் பிறந்த திணம், திருவள்ளுவர் ஆண்டு என்பது எல்லாம், உலகிற்கு தமிழின் பெருமையை, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் எப்படி உயர்வாய் சிந்தித்திருக்கிறான் என்பதற்கான ஒரு அடையாளம். திருவள்ளுவர் பிறந்த தினம் எது என்பது வேண்டுமானால், தெளிவில்லாமல் இருக்கலாம், ஆனால் திரு குறள் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை யாரும் மறுக்க முடியாது.

//
//If Karunanidhi’s intent was to further weaken whatever is left of Hinduism in Tamil Nadu, he has picked the wrong target
//
கருணாநிதி தை 1 தழிழ் புத்தாண்டாக்கி சட்டம் கொண்டு வந்தாரே ஒழிய, தமிழர்கள் யுகாதியை கொண்டாட கூடாது என்று சட்டம் கொண்டுவர வில்லை.

//
//What amazes me the most is that nobody in Tamil Nadu has raised as much as a whimper against this cultural atrocity.
//
கொஞ்ச நேரத்திற்கு முன்பாக இந்து மதம் என்று பேசியவர் இப்போது காலச்சாரம் என்று பேசுகிறார், இவருக்கு தமிழ் கலாச்சாரத்தில் மிக அக்கறை(?),

மற்றவர்களை வெறுப்பதற்கு காட்டுகிற அக்கறையில் பாதியை அவர்களை நேசிப்பதற்கு காட்டினால் உலகம் மிகவும் அழகாக மாறிவிடும். வெறுப்பு நம் கண்களுக்கு நாமாகவே அணிந்து கொள்கிற கறுப்புக் கண்ணாடி. உலகமே கறுப்பாய்த்தான் தோன்றும். கறுப்பான் உலகம்தான் வேண்டும் என்பவர்களிடம் நாம் என்ன சொல்ல ? நம் சங்கை நாம் ஊதிவிட்டு கிளம்ப வேண்டியதுதான்

Saturday, January 10, 2009

ஓநாயிடம் ஆடு

0 Comments
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே நடந்து வரும் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி விடாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.
ஓநாயிடம் ஆட்டை பத்திரமாக பார்த்து கொள்ள சொல்கிறது ஐநா சபை. எங்க போய் முட்டிகிறதுன்னு தெரியலை.

மேலும் செய்திகளுக்கு

Friday, January 9, 2009

காங்கிரசு கட்சி

0 Comments
விசு படங்களில்[?] வருவது மாதிரி, கணவன் குடிகாரன், மகன் ஊதாரி, மகளுக்கு விடலைப் பருவக் காதல், இளையவன் மக்கு, என் குடும்பமே தரங்கெட்டு இருப்பது போல, காங்கிரசு கட்சிக்கு பெருமை சேர்க்கும் தமிழ் இன பற்றாளர்கள்(????), தங்கபாலு, வாசன், கிருஷ்ணசாமி வாண்டையார், சிதம்பரம், செல்லகுமார், வசந்தக்குமார், ஜெயந்தி நடராஜன், EVKS.இளங்கோவன், பட்டியல் வெகு நீளம்.

இவர்களின் குழுக்களைப் பற்றி மேலும் படிக்க,

முன்பு ஒருமுறை, தி.க. தலைவர் வீரமணி, காங்கிரசு பற்றிய உண்மையை சொன்னதற்காக, S.R. பால சுப்பிரமணியன்[பெயரை கூட தமிழில் எழுதாத தமிழர்] என்று நினைக்கிறேன், வீரமணிக்கு எந்த தகுதியும் இல்லை என்று[ஏதோ இவர்களுக்கு தகுதி இருப்பது போல்] குதித்தார்.

காங்கிரசு கட்சியில், வலைப் பதிவு படிக்கும் அளவுக்கு யாராவது அறிவாளி இருந்ந்தால், வலைப் பதிவில் காங்கிரசு கட்சியின் புகழ் மணப்பதை படிக்க வேண்டும். எப்படி இவர்களால், தன் இனம் அழிக்கப் படுகிறது என்பதை கூட உணராமல் குழு சண்டையிலும், சுய நலக் குட்டைகளிலும் ஊறித் திளைக்க முடிகிறதோ.

ராசிவ் காந்தி குண்டு வெடிப்பைப் பற்றி மட்டுமே, தினந்தோரும், சலிக்காமல் பேசும், இவர்களுக்கு, அந்த குண்டு வெடிப்பில், ஏன் காங்கிரசு கட்சியின் ஒரு தலைவர் கூட சாகவில்லை, என்ற கேள்விக்கு மட்டும் பதிலே தெரியாது.

இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றார் என்பதற்காக, சிறியவர் முதல் முதியவர் வரை கொன்று குவித்துவிட்டு, காந்தியின் வழியில் நடப்பதாய் கூறிக் கொள்ளும் இவர்களுக்கும், குசராத்தில், கொலை வெறியாட்டம் செய்யும் காட்டு மிராண்டிகளுக்கு துணை போகும் பாரதி சனதா கட்சிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் பெரிதாக கண்டு பிடித்து விட முடியாது.

எங்க தாத்தன் பாட்டனெல்லாம் காங்கிரசு கட்சிக் காரர்கள், அதனால நானும் காங்கிரசு கட்சி என்று கூறும் மக்கள் இருக்கும வரை, காங்கிரசோ மற்ற திமுக, அதிமுக உட் பட பாடம் கற்க பொவதில்லை.

தமிழா உனக்கு நீயே துனை.

இவையெல்லாம் கீழே உள்ள செய்திகளை படித்த பின் எழுந்த கோபத்தினால் எழுதியவை.
உளவு விமானம் மூலம் பிரபாகரனை கண்காணிக்கும் 'ரா': திருமா.
சோனியாகாந்திக்கு ராமதாஸ் கடிதம்
நெடுமாறன் உள்பட 500 பேர் கைது
'கடைசி புகலிடம்'-சோனியாவுக்கு ராமதாஸ் கடிதம்
இலங்கைப் பிரச்சினையில் மத்திய, தமிழக அரசுகள் இரட்டை வேடம்: இல.கணேசன்

Thursday, January 8, 2009

புதிய முகம்

0 Comments
நீன்ட நாட்களாக எஞ்சியிருந்த வேலை, புதிய வலைத்தளம், மற்றும் புதிய வடிவமைப்பு. இரண்டும் இன்று நிறைவேறியது. இன்னும் வடிவமைப்பில் கொஞசம் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது.
மிகவும் கடுப்பேற்றிய விசயம், தேதி "undefined" என்று Blogger காட்டியது, ஆனால் HTMLல் எல்லாம் சரியாக இருந்தது. கழுதை கெட்டால் குட்டி சுவரு, நான் திக்கு தெரியாமல் முழித்தால் வழக்கம்போல் கூகுள் ஆண்டவரிடம்[நான் பார்த்தவரை, வேண்டுவன கொடுக்கும் ஒரே ஆண்டவர்] கேட்ட போது, Blogger Setting ஐ கை காட்டியது. 20 நிமிட போராட்டத்திற்கு பின் வெற்றி :)

நிறைய எழுத நினைத்தவைகள் எழுதாமல் தேங்கி கிடக்கின்றன, கடந்த 2 மாதங்களில், அமெரிக்க வாழ்க்கை, மனதை தொட்ட திரைப் படங்கள், 2 நாள் தூங்க விடாமல் செய்த சில புத்தகங்கள் என நிறைய தேங்கி கிடக்கின்றன. இந்த வாரம் முடிந்த வரை சிலவற்றையாவது முடித்து விட வேண்டும்.

Power of Less, The: The Fine Art of Limiting Yourself to the Essential...in Business and in Life

0 Comments
Power of Less, The: The Fine Art of Limiting Yourself to the Essential...in Business and in Life