சித்திரை மாதத்தில் ‘பிறப்பதாகச்’ சொல்லப்படும் இந்த ஆண்டுப்
பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா?
வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப்
பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத்
தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள
விழைகின்றோம்.
இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில்
எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம்
இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று
அறுபது பெயர்கள் இருக்கின்றன.
இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!
இந்த
முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ம்
ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள்
கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப்பட்டது என்று
கூறுவோரும் உண்டு
பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால்,
ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை
நிறுத்தப்பட்டுள்ளது
எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில்
நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள்,
கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது
இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடை
முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை
காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற
அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.
மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும்
மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற
நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம்
கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’
என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’
என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று
பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால்,
நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை
நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’
என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே
செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம்
கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’
இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”
மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய
வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது
என்று கூறியுள்ளார்
தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் காணப்படும்
வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள்
பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை
ஆரியர் ஊடுருவலுக்கு
முன்னரேயே தமிழர்கள், வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர்
என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின்
நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து
உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும், பருவங்களையும்
அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என
அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச்
சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும்
‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள்
என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24
மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட்
பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து
வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான்
வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த
ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு
பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை
இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான
விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை
கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை,
தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள்
மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும்,
மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு
வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே
தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை
வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக
எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்
“தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.”
பொங்கல் திருநாள் தமிழரின் தனிப்பெரும் திருநாள் ஆகும்.
பொங்கல் திருநாளைத் தமிழர்கள் ‘புதுநாள்’ என்று அழைத்தார்கள். பொங்கல்
திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி
என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது-
போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர்.
புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால்
புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.
தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும்
நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி
அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே
செய்கின்றார்கள்.
இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன.
முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தமிழர் நாகரிகமும்
பண்பாடும, ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக்
கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப்
புத்தாண்டு- மலேசிய சிறப்பு மலர், தமிழர் யப்பானியர் வாழ்வில்
தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்களும்
சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. காலத்தின் தேவை கருதி
ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள்
மீண்டும் இடம் பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங்
கனிந்த நன்றிகள்.
0 Comments :
Post a Comment